வாழ்க்கை வரலாற்று படத்தில் கியாரா அத்வானி?

மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த பழம்பெரும் நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் கியாரா, இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் குழந்தை பிறப்பிற்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் மிகப்பெரிய அளவில் தயாராக உள்ளது.
மீனாகுமாரி பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடித்த ''பாக்கிஜா'', ''பைஜூ பாவ்ரா'', ''பூல் ஆவுர் பத்தர்'' போன்ற படங்களை இன்றைய தலைமுறையினரும் விரும்பி பார்க்கிறார்கள். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
கியாரா அத்வானி தற்போது ''டாக்ஸிக்'' படத்திலும், ''வார் 2'' படத்திலும் நடித்து வருகிறார். இதில், ''டாக்ஸிக்'' அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதியும், ''வார் 2'' படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதியும் வெளியாக இருக்கிறது.






