“பைரசிகளை ஒழிப்போம்” ... “ஜன நாயகன்” படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட சிரஞ்சீவி

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
“பைரசிகளை ஒழிப்போம்” ... “ஜன நாயகன்” படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட சிரஞ்சீவி
Published on

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், 'ஜன நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின் 'ஜன நாயகன்' படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

நேற்று மாலை ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

'ஜன நாயகன்' படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,

இந்நிலையில், தெலுங்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி, “ஜன நாயகன் படம் துரதிர்ஷ்டவசமாக இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. சினிமா என்பது நம்பிக்கை, கடும் உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக்கனவுகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இத்தகைய சம்பவங்கள் சினிமாவில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. மேலும், நமது படங்களை பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் நாம் உறுதுணையாக நிற்போம். சினிமாவை மதித்து, அதைப் பாதுகாத்திட நம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம். பைரசிகளை ஒழிப்போம். சினிமாவை காப்போம்” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com