

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டினர்.
காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர். நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் வந்திருந்த மோனலிசா கேரளாவில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த முகம்மது பர்மான் என்பவரை காதலித்து வந்த மோனலிசா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் நேற்று திருமணம் செய்துகொண்டார். மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். மோனலிசா காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருமணத்தை பலரும் ‘லவ் ஜிகாத்’ என்று விமர்சித்து வரும் நிலையில் மோனலிசா “நான் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொண்டேன். இது ‘லவ் ஜிகாத்’ கிடையாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் சமமாகவே கருதுகிறேன். இது எனது சுய விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம். கேரளா எங்களுக்கு பாதுகாப்பான இடமாகத் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.