

மலையாள நடிகரும், தமிழில் 'கும்கி' படத்தில் நடித்தவருமான ஸ்ரீஜித் ரவிக்கு, சிறுமிகள் முன்பு ஆபாசமாக நடனமாடிய வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீஜித் ரவி. மூத்த மலையாள நடிகர் டி.ஜி. ரவியின் மகனான இவர், 2005-ம் ஆண்டு வெளியான 'மயூகம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'வேட்டை', 'மதயானை கூட்டம்', 'கதகளி' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி, சிறுமிகள் முன்பு ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர், திருச்சூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஸ்ரீஜித் ரவி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்சூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரம்யா மேனன் தீர்ப்பளித்தார். மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.