குருவியார் கேள்வி-பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியார் கேள்வி-பதில்கள்
Published on

குருவியாரே, சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் யார், படத்தை இயக்கியவர் யார், படம் எப்போது திரைக்கு வரும்? (ப.விக்னேஷ், சென்னை1)

சூரரை போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பவர், அபர்ணா. இயக்கியவர், சுதா கொங்கரா. படத்தை வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன!

***

கீர்த்தி சுரேஷ் உடல் மெலிந்த பின், எப்படியிருக்கிறார்? (எஸ்.கதிர்வேலன், சின்ன சேலம்)

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் மாதிரி மிக அழகாக இருந்த கீர்த்தி சுரேசுக்கு யார் சொன்ன ஆலோசனை என்று தெரியவில்லை. உடலை மெலிய வைக்கிறேன் என்று அழகான தோற்றத்தை இழந்து விட்டார்!

***

குருவியாரே, பிரபு திரையுலகுக்கு அறிமுகமான படம் எது, அறிமுக படத்தில் அவர் என்ன வேடத்தில் நடித்தார், அவர் நடித்த படங்களில் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம் எது? (எம்.ராம்சுந்தர், அருப்புக்கோட்டை)

பிரபு அறிமுகமான படம், சங்கிலி. அந்த படத்தில் அவர் வில்லனாக நடித்தார். அவர் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம், சின்ன தம்பி!

***

ஒரு காலத்தில் இந்தி பட பாடல்களை அதிகமாக கேட்டு ரசித்த ரசிகர்களை, தமிழ் பாடல்களை அதிகமாக கேட்டு ரசிக்க வைத்த இசையமைப்பாளர் யார்? (கே.செல்வராஜ், திருப்பூர்)

இசைஞானி இளையராஜா!

***

குருவியாரே, ஓவியாவும், சோனியா அகர்வாலும் ஒரே மாதிரியான முக தோற்றத்தில் காணப்படுகிறார்களே...அவர்கள் இருவரும் உறவினர்களா? (ஏ.தமிழ் செல்வன், பட்டுக்கோட்டை)

ஓவியாவுக்கும், சோனியா அகர்வாலுக்கும் இடையே நடிகை என்ற பந்தம் தவிர, வேறு எந்த உறவுமுறையும் கிடையாது. ஓவியா, கேரளாவை சேர்ந்தவர். சோனியா அகர்வால் மும்பைவாசி!

***

சுமித்ராவின் மகள் உமா என்ன ஆனார்? ஒரு சில படங்களில் மட்டுமே பார்க்க முடிந்த அவரை தொடர்ந்து வெண்திரையில் பார்க்க முடியவில்லையே...? (சா.வினித், மேட்டூர்)

உமா திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த போய்விட்டார். திருமணத்துக்குப்பின், அவர் நடிக்கவில்லை!

***

குருவியாரே, நிறைய படங்களில் நடித்து, நிறைய பணமும் சொத்துகளும் சேர்த்த சில நடிகைகள், பிற்காலத்தில் வறுமையில் சிக்கிக் கொள்கிறார்களே...எப்படி? (ஆர்.தனபால், கோபிச்செட்டிப்பாளையம்)

பொருந்தாத வாழ்க்கை துணைதான் காரணம். இதற்கு மறைந்த நடிகை சிலுக்கு சுமிதாவை ஒரு உதாரணமாக குறிப்பிடலாம்!

***

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இல்லங்களும் நடத்தி வரும் நடிகர்கள் யார்யார்? (பொ.செல்லதுரை, கோவை)

நடிகர்களில், ராகவா லாரன்ஸ் மட்டுமே அதுபோன்ற தர்மஸ்தாபனங்களை நடத்தி வருகிறார்!

***

குருவியாரே, பெண்களுக்கு துணிச்சலும், வலுவான உடற்கட்டும் தேவை என்று ஒரு விளம்பர படத்தில் கூறி வரும் டாப்சி, நிஜமாகவே வலுவான உடற்கட்டு உடையவரா? (வி.புஷ்பா, திருநின்றவூர்)

டாப்சி பலம் மிகுந்த நடிகை என்று அவருடன் மோதிப்பார்த்து தோல்வி அடைந்த எதிரிகள் சொல்லி வருகிறார்கள்!

***

நெடுஞ்சாலை பட புகழ் ஆரி, கோழி கூவுது பட புகழ் அசோக் இருவருக்கும் உள்ள ஒற்றுமை..? (டி.ஜெயபால், ஊட்டி)

இருவருக்கும் நடிகர்கள் என்ற ஒற்றுமை தவிர, வேறு ஒற்றுமை எதுவும் இல்லை!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். நடித்த நல்ல நேரம் படம் இந்தியிலும் தயாரானதாக கூறுகிறார்களே...அது என்ன பெயரில் தயாரானது? எம்.ஜி.ஆர். வேடத்தில் நடித்தவர் யார், கே.ஆர்.விஜயா வேடத்தில் நடித்தவர் யார்? (சி.பாபு காமராஜ், சிவகாசி)

நல்ல நேரம் படம் இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரில் தயாரானது. எம்.ஜி.ஆர். நடித்த கதாபாத்திரத்தில் ராஜேஷ்கன்னா நடித்தார். கே.ஆர்.விஜயா நடித்த வேடத்தில் வந்தவர், தனுஜா. (இவர், இப்போது இந்தி பட உலகில் பிரபல நாயகியாக இருக்கும் கஜோலின் அம்மா!)

***

கதாநாயகிகளுடன் நெருக்கமான நட்பில் இருந்த ஆர்யா, இப்போது அடக்கி வாசிக்கிறாரே...இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு? அதற்கு என்ன காரணம்? (வெ.சாய்ராம், மதுரவாயல்)

ஆர்யாவின் குடுமி இப்போது அவர் மனைவி சாயிஷா கையில் இருப்பதால்தான் அந்த அடக்கம் என்கிறார்கள்!

***

குருவியாரே, நடிப்பு, நடனம் இரண்டிலும் தனுஷ் திறமைசாலியாக இருந்து வருவதற்கு காரணம் யார்? (எம்.ஸ்ரீதர், குலசேகரபட்டினம்)

அவர்தான் காரணம். அவர் மட்டுமே காரணம். அவரே செதுக்கிய வாழ்க்கையும், உழைப்பும் சேர்ந்து அவரை உயரத்தில் தூக்கி நிறுத்தி இருக்கிறது!

***

விளம்பர படங்களில் நடிக்கும் பிரபல நாயகிகள் யார்யார்? (ஜெய்கணேஷ், காஞ்சீபுரம்)

ரேவதி, நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ்!

***

குருவியாரே, தமிழ் பட உலகின் வெற்றிகரமான கதாநாயகனாக இருந்து வரும் விஜய்சேதுபதி, மார்க்கெட் இருக்கும்போதே வில்லனாகவும், கவுரவ வேடங்களிலும் நடிப்பது ஏன்? (எம்.கே.விஜய், திருச்சி)

அவர் மீதே அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் காரணம். கதாநாயகன் என்ற வட்டத்துக்குள் அவர் சிக்க விரும்பவில்லையாம்!

***

கடத்தல், சதித்திட்டம், கொலை முயற்சி, ஆஸ்பத்திரியில் கவலைக்கிடம் போன்ற காட்சிகள் இல்லாமல், சின்னத்திரையில் ஒரு தொடர் உருவாகுமா? (எம்.முகமது காசிம், உடுமலைப்பேட்டை)

நீங்கள் குறிப்பிட்ட கிரிமினல் வேலைகள் இல்லையென்றால், அந்த தொடர் ஒரு வாரம் கூட தாங்காது. அதை புரிந்து கொண்டுதான் சின்னத்திரை சீரியல்களுக்கு கதை தயார் செய்கிறார்கள்!

***

குருவியாரே, சமந்தாவை, சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று அவருடைய மாமனார் குடும்பத்தினர் கூறுகிறார்களாமே...அது உண்மையா? (எச்.தன்வீர் அகமது, புதுச்சேரி)

அது உண்மையோ, பொய்யோ...சமந்தா சினிமாவில் இருந்து சீக்கிரமே விலகிக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்!

***

அனுஷ்காவை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லையே...அவர் என்ன செய்கிறார்? (மா.சுந்தரவேல், சிவகங்கை)

அனுஷ்கா இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com