நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

யூடியூபில் பிராங்க் மூலம் கவனம் பெற்ற ‘ப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகிறார்.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
யூடியூபில் பிராங்க் மூலம் கவனம் பெற்ற 'ப்ராங்க்ஸ்டர்' ராகுல் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். படத்தில் எம் எஸ் பாஸ்கர் மற்றும் ப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். காமெடி, ஹாரர் பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
'பார்க்கிங் ' படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் - இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






