தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவராக மறைந்த பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறைந்த இயக்குநர் பாக்யராஜை கவுரவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவராக மறைந்த பாக்யராஜ் நியமனம்
Published on

சென்னை,

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டடத்திற்கு பாக்யராஜ் பெயர் சூட்டப்படும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த ஜூன் 27-ந் தேதி அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.

மறைவிலிருந்து தகனம் வரை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பாக்யராஜ் குடும்பத்தினருடன் இருந்து கவனித்துக்கொண்டார். மேலும், நேர்காணல் ஒன்றில் பேசிய போது, “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவராக பாக்யராஜ் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கப் போகிறேன்” என்றார்.

தற்போது, புதிய பதிவொன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில், “பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன். அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என் மரியாதைக்குரிய இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் ஆர். சுந்தரராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும், கூடவே என் நினைவு பெட்டகத்திலிருந்தும் அவர் கக்கிய விஷமும் கரைந்துப் போகட்டும்.

நல்லதை மட்டும் நினைவில் கொள்ளும் வகையில் இன்று ஒரு நற்செய்தி. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச் சென்றேன். ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ‘நிரந்தர கவுரவத் தலைவர்’ கே. பாக்யராஜ் என்பதே. இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும். கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி. அதற்காக 247 எழுத்துக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்கி, சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com