“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார்.
‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல்நிலையம்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது போஸ்ட் புரோடக்சன் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் “‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் கேவி சபரீஷ் “இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு பணிபுரிந்து நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். போஸ்ட் புரோடக்சன் பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.






