

ஐதராபாத்,
தெலுங்கில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்த நடிகை லயா, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் களமிறங்க உள்ளார்.
சிவாஜி உடன் இணைந்து நடித்துள்ள டார்க் காமெடி கிரைம் திரில்லர் திரைப்படமான ‘சம்பிரதாயிணி சுப்பிணி சுத்தபுசாணி’ வருகிற 6-ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் லயா தனது இரண்டாம் இன்னிங்ஸ் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்தார்.
இந்தப் படத்தில் தன்னுடைய பழைய மென்மையான இமேஜிற்கு மாறாக ‘உத்தரா’ என்ற சுயநலமான மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவர் தெரிவித்தார். கணவர் (சிவாஜி) மீது அழுத்தம் கொடுக்கும் இந்த வேடம் கதை நகர்வில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், இரண்டாம் இன்னிங்ஸில் வலுவான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார். தற்போது ஜகபதி பாபு உடன் ‘வடலா’ என்ற சைக்காலஜிக்கல் திரில்லர் படத்திலும், ஸ்ரீகாந்த் உடன் ஒரு சோஷியோ-பான்டஸி படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்தார். கதை வலுவாக இருந்தால் சிறிய கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் எனவும் லயா கூறினார்.