ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை... ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி

ஊர்வசி ரவுடேலா தரப்பின் ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை... ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘லெஜண்ட்’ பட நாயகி
Published on: 

ஊர்வசி ரவுடேலா பெயர், புகைப்படங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு... ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கோரப்பட உள்ளதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது.

ரூ.7,000 கோடி வரை இழப்பீடு

இந்தி சினிமாவில் அறிமுகமானாலும், கன்னடம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

இந்த நிலையில் , நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் மீது அவரது தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோரப்படுவதாகவும் ஊர்வசி ரவுடேலா தரப்பு தெரிவித்துள்ளது.

‘அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது’

இதுதொடர்பாக ஊர்வசி ரவுடேலாவின் தரப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ரூ.7,000 கோடி இழப்பீடு கோருவது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி ஊர்வசியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளது.

மேலும், ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் ஒரு தனிநபரின் அடையாளம் மற்றும் புகைப்படங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி அவசியம் என்றும் ஊர்வசி தரப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரபலங்களின் அடையாளத்தை பயன்படுத்துவதில் சர்ச்சை

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் தோற்றத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் ‘டீப்ஃபேக்’ உள்ளடக்கங்கள் தொடர்பாக பல திரை பிரபலங்கள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஊர்வசி ரவுடேலா தரப்பின் ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com