காமராஜரை போல்..மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார்- நடிகர் பிரகாஷ்ராஜின் பதிவு

திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
காமராஜரை போல்..மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார்- நடிகர் பிரகாஷ்ராஜின் பதிவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது.

இறுதியில் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர். சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. என்று தெரிவித்துள்ளார்.

திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com