ஸ்பீல்பர்க், நோலன் போல்... ‘துரந்தர் 2’ இயக்குநருக்கு கங்கனா ரணாவத் புகழாரம்

‘துரந்தர் 2’ படத்தின் இயக்குநருக்கு நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்பீல்பர்க், நோலன் போல்... ‘துரந்தர் 2’ இயக்குநருக்கு கங்கனா ரணாவத் புகழாரம்
Published on

மும்பை,

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த 'துரந்தர்' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் 19-ந்தேதி வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ‘துரந்தர் 2’ படத்தின் இயக்குநருக்கு நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“துரந்தர் 2 படத்தின் வெற்றி மூலம் நடந்திருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால், இயக்குநர் ஆதித்யா தாருக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதுதான். ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், கிறிஸ்டோபர் நோலன், குவெண்டின் டரண்டீனோ போன்றவர்கள், நடிகர்களை விட மிகப்பெரிய ஸ்டார்களாக பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்திய இயக்குநர்களுக்கு அவர்களுக்கு தகுந்த மரியாதையை நாம் கொடுப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் அதிகமாக உழைத்து, குறைவான ஊதியம் பெற்று, சூப்பர்ஸ்டார் நடிகர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, இயக்குநர் ஆக வேண்டும், ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் அல்லது வேறு தொழில்நுட்ப கலைஞர் ஆக வேண்டும் என்று யாரும் ஆசைப்படுவதில்லை. எல்லோரும் நடிகர் ஆக வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் இப்போது ஒரு சூப்பர்ஸ்டார் இயக்குநர் உருவாகிவிட்டார். தற்போது அவரது கதையை பார்க்கும் இளைஞர்கள், தாங்களும் இவ்வாறு உயர வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் மூலம் திரைத்துறை மிகப்பெரிய உயரங்களை அடையும்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com