கல்லீரல் பாதிப்பு; நடிகர் அல்வா வாசு கவலைக்கிடம்

நடிகர் அல்வா வாசு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
கல்லீரல் பாதிப்பு; நடிகர் அல்வா வாசு கவலைக்கிடம்
Published on

சென்னை,

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் அல்வா வாசு. ரஜினிகாந்துடன் அருணாச்சலம், சத்யராஜுடன் அமைதிப்படை படங்களில் இவர் நடித்த காட்சிகள் பேசப்பட்டன. 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் மணிவண்ணனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அல்வா வாசு குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். அவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோதித்து கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.

அல்வா வாசுவை காப்பாற்ற முடியாது என்றும் வீட்டுக்கு கொண்டுசென்று விடும்படியும் மருத்துவர்கள் கைவிரித்தனர். இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அல்வா வாசுவுக்கு, அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:-

நடிகர் அல்வா வாசு பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை. எளிமையான மனிதர். உடல் நலக்குறைவால் சென்னையில் இருக்க முடியாமல், சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார். மருத்துவம் அவரை கைவிட்டுவிட்டது. கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் குடும்பத்துக்கு பொருளாதார உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com