கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி பூங்கொத்து கொடுத்து கார்த்திகாவை வாழ்த்தினார்.
கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்
Published on

சென்னை,

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா கில்லியாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னை கண்ணகி நகரில் உள்ள கபடி வீராங்கனை கார்த்திகா வீட்டிற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தி உள்ளார். மேலும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கியதுடன் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "கண்ணகி நகர் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஏரியா. மாஸ்டர் படத்திற்கு இந்த ஏரியாவில் இருந்துதான் நிறைய பேரை நடிக்க வைத்தேன். கார்த்திகாவின் இந்த சாதனை ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது." என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com