4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் ஈட்டிய லோகேஷ் கனகராஜின் “டிசி” திரைப்படம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியானது.
4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் ஈட்டிய லோகேஷ் கனகராஜின் “டிசி” திரைப்படம்
Published on

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம் கடந்த 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கூலி' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளானது.

கேங்ஸ்டராக லோகேஷ்... முக்கிய வேடங்களில் வாமிகா கபி, சஞ்சனா

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வன்முறை காட்சிகளால் கவனம் ஈர்த்த ‘டிசி’

சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன. இதன் டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பினை பெற்றது.

இசை வெளியீட்டு விழா

‘டிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது, அனைத்து பாடல்களையும் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் 15 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

‘டிசி’ படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு

அனிருத், வேடன் இணைந்து பாடிய‘பூம் பா டிகா டிகா’ பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர். ‘ராகா ஆப் ரிவெஞ்’ மற்றும் ‘ஹேங் ஓவர்’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரூ.50 கோடி வசூலித்த “டிசி” திரைப்படம்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ‘டிசி’ படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com