மனிதர் உள்ளவரை மட்டுமல்ல இடம் பெயரும் உயிர்கள் உள்ளவரை காதல் இருக்கும்- வைரமுத்து

காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல இடம் பெயரும் உயிர்கள் உள்ளவரை காதல் இருக்கும்- வைரமுத்து
Published on

சென்னை,

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (Valentine’s Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு காதலர்கள் பரிசுகள், வாழ்த்துக்கள் மற்றும் இனிய தருணங்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். சமீப ஆண்டுகளில் காதலர் தினம் ஒரு திருவிழா போல் மாற்றம் பெற்று, இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"காதல் எனும் உயிர்ப்பண்பு

ஆண் பெண்

மாமிசத்தோடு மட்டும்

சம்பந்தப்பட்டதில்லை

எல்லா நிலைகளிலும்

எல்லா வயதினிலும்

அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

‘பெருந்தேன் இழைக்கும்

நாடனொடு நட்பே’ என்று

சங்கத் தலைவி பாடுமிடத்து

உடற்புணர்ச்சி காதலாகிறது

‘காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கி’

என்று பாடும்பொழுது

கடவுள் பக்தி காதலாகிறது

‘காதல் திருமகன்’ என்று

தசரதன் தளும்புகிறபோது

பாசம் காதலாகிறது

உதடுகளை மாற்றி மாற்றி

முத்தங்கள் பயணப்படுவதுபோல்

இதயங்களை மாற்றி மாற்றிக்

காதல் பயணப்படுகிறது

மனிதர் உள்ளவரை மட்டுமல்ல

இடம் பெயரும்

உயிர்கள் உள்ளவரை

காதல் இருக்கும்

உடலோடு தொடங்கி

உடல் தாண்டி

உயிரில் ஐக்கியமாகிறபொழுது

காதல் தன் புனிதயாத்திரையில்

பூரணம் பெறுகிறது

எல்லாக் காதலுக்கும்

இது நேர்வதில்லை

இன்று விற்பனையாகும்

250 மில்லியன் ரோஜாக்களும்

குழல் சேர்வதில்லை.

ஆனாலும் ரோஜாக்கள்

பூக்கவே பூக்கும்;

ஆனாலும் காதல்

மலரவே மலரும்

காதலைத் தடுக்க

நாம் யார்?

தானாய்த் தோன்றித்

தானாய் மறையும்

சந்திர சூரியர்

போன்றது காதல்

வாழ்க காதலே;

பூமியை வாழவை"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com