“மாநாடு” படம் மிகப்பெரிய மரியாதையை பெற்று தந்தது - சுரேஷ் காமாட்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த “மாநாடு” படம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
“மாநாடு” படம் மிகப்பெரிய மரியாதையை பெற்று தந்தது -  சுரேஷ் காமாட்சி
Published on: 

‘மாநாடு’ படம் மிகப் பெரிய மரியாதையை பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாக கருதுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது. ரூ. 100 கோடி வரை வசூலித்து மீண்டும் சிம்புவின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ ‘மாநாடு’ மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாள்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும். ஆத்ம திருப்தி தந்த அப்படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்புத் தம்பி சிலம்பரசன் டி. ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு, மரியாதைக்குரிய எஸ். ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.

காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக ‘மாநாடு’ அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்.. தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம். எஸ்டிஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.

X