“மாண்புமிகு பறை” படத்தின் டீசர் வெளியானது

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Published on

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மாண்புமிகு பறை திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025ல் திரையிடப்பட்டது. அப்போது, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடைபெற்றது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது. இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்… பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து குறிப்பாக பிரான்ஸிலிருந்து தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது. பறை என்பது இசை மட்டுமல்ல அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் மாண்புமிகு பறை.

இத்திரைப்படம் மீண்டும் கேன்ஸில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதை பெற்றுள்ளது.

தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பறை இசை குறித்தும், தமிழ் மண்ணின் அடையாளம் குறித்தும் இந்தப் படம் பேசுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாண்புமிகு பறை படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com