மீண்டும் திகில் படத்தில் மாதவன்... 'சோர்‌ரி' இயக்குநருடன் கூட்டணி

நடிகர் மாதவன் தற்போது 'சோர்‌ரி' பட இயக்குநர் விஷால் புரியாவுடன் புதிய படத்துக்காக கைகோர்த்துள்ளார்.
மீண்டும் திகில் படத்தில் மாதவன்... 'சோர்‌ரி' இயக்குநருடன் கூட்டணி
Published on: 

சென்னை,

விஷால் புரியா இயக்கத்தில் கஜோல் நடித்த 'மா' திரைப்படத்தில் மாதவன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இருவரும் முழுநீள திரைப்படத்தில் இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாதவன் மீண்டும் திகில் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். '13B', 'சைத்தான்' ஆகிய படங்களின் மூலம் திகில் கதைகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது 'சோர்‌ரி' பட இயக்குநர் விஷால் புரியாவுடன் புதிய படத்துக்காக கைகோர்த்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரோஹித் ரஞ்சன் தனது ஃப்ராஸ்ட்லிட் புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

மாதவன்தான் முதல் தேர்வு!

இந்தப் படத்தில் மாதவனை நடிக்க வைப்பது குறித்து இயக்குநர் விஷால் புரியா கூறியதாவது: "இந்தக் கதாபாத்திரத்துக்கு மாதவன் சார்தான் எனது முதல் மற்றும் ஒரே தேர்வாக இருந்தார். அவர் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. '13B' திரைப்படத்தின் மூலம் இந்திய திகில் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் அவர். நடிப்பில் அவருக்கு இருக்கும் அனுபவம், கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் தீவிரமான திகில் கதைகளைக் கையாளும் விதம் ஆகியவை மிகவும் அரிதானவை. அவரைவிட இந்தப் படத்துக்கு பொருத்தமான நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

உடல் சிலிர்க்க வைக்கும் திகில் அனுபவம்!

மேலும், மாதவன் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர் என்றும் விஷால் ஃபுரியா குறிப்பிட்டுள்ளார். இந்திய திகில் திரைப்படங்களில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும், படம் பார்ப்பவர்களின் உடல் சிலிர்க்கும் அளவுக்கு அச்சத்தை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் திகில் கதையில் மாதவன்!

மாதவன் ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு வெளியான '13B' திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இதையடுத்து 2024-ம் ஆண்டு வெளியான 'சைத்தான்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், விஷால் புரியா இயக்கத்தில் கஜோல் நடித்த 'மா' திரைப்படத்தில் மாதவன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இருவரும் முழுநீள திரைப்படத்தில் இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X