

மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித். இவர் தற்போது ’மா பெஹன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய நடிகை மாதுரி தீட்சித் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பாரபட்சங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஆண்களின் காதல் சமூகத்தில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. ஆனால் அதே சூழலில் பெண்கள் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்மறையான பார்வைக்கும் உள்ளாகின்றனர் என்று மாதுரி தீட்சித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,
“இது ஒரு ஆணாதிக்க சமூகம். ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் இருந்து வருகிறது. ஒரு ஆணுக்கு பல காதலிகள் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் அதையே செய்தால், அவள் தவறானவளாக சித்திரிக்கப்படுகிறாள். அவளைப் பற்றி எதிர்மறையான பிம்பம் உருவாக்கப்படுகிறது” என்றார்.
“இந்த சமூகத்தில் பல எழுதப்படாத விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை ‘மா பெஹன்’ படம் உடைத்தெறிகிறது. அதே சமயம் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் குழப்பங்களும் குறைகளும் கொண்ட, நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் போன்ற எதார்த்தமானவர்கள்” என்று அவர் கூறினார்.
இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஒரு பிளாக் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்தில் மாதுரி தீட்சித்துடன் திருப்தி டிம்ரி, ரவி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.