பெற்றோர், மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து

தாய், தந்தை மற்றும் மனைவிக்காக காமெடி நடிகர் மதுரை முத்து கோவில் கட்டியுள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரை முத்து. காமெடி நடிகரான இவர், டி.வி. நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவருடைய பெற்றோர் ராமசாமி, முத்து இருளாயி. இருவரும் இறந்துவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி லேகா பலியானார்.
இந்நிலையில் தன்னுடைய தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு கோவில் கட்டி சிலைகள் அமைத்து நேற்று மதுரை முத்து திறப்பு விழா நடத்தினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, "பெற்றோரை அவமதிப்பது, அவர்களுடைய பேச்சை கேட்காமல் இருப்பது, போதைகளுக்கு அடிமைப்பட்டு பெற்றோரை அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பெற்றோரை மதித்து வணங்குதல் எவ்வளவு சிறப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் எனது பெற்றோருக்கு சிலை அமைத்து உள்ளேன். அதேபோல் எனது மனைவி சிலையையும் ஒன்றிணைத்து கோவிலாக்கி உள்ளேன்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கும், கிராம மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. டி.வி. நடிகர், நடிகைகள், சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர்.






