"மஹாவதார் நரசிம்மா" சினிமா விமர்சனம்

இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கிய "மஹாவதார் நரசிம்மா" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
அசுரர்களான ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள், பூமியில் விஷ்ணுவை வணங்குபவர்களை துன்புறுத்துகிறார்கள். விஷ்ணுவை அழிப்பதே லட்சியம் எண்ணி சபதம் எடுக்கிறார்கள். இதற்கிடையில் பூமாதேவியை சிறைபிடித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கும் ஹிரண்யாக்ஷனை வராக அவதாரம் எடுத்து வதம் செய்யும் விஷ்ணு, பூமாதேவியை மீட்கிறார்.
தம்பியை பறிகொடுத்த ஹிரண்யகசிபு, தனக்கு பெரும் பலம் தேவை என்பதை உணர்ந்து பிரம்மனை நோக்கி கடும் தவம் இருக்கிறார். மெய்சிலிர்த்து போய் தோன்றும் பிரம்மனிடம், தன்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாத வரத்தை கேட்டு ஹிரண்யகசிபு. அதன்பிறகு இந்திரலோகத்துக்கு சென்று தேவர்களை சிறைபிடிக்கும் ஹிரண்யகசிபு, மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் ஹிரண்யகசிபுவுக்கு பிறக்கும் பிரகலாதம், விஷ்ணுவின் துதி பாடுகிறார். இதனால் ஒருகட்டத்தில் தன் மகனை கொல்ல துணியும் ஹிரண்யகசிபு பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். அது நடந்ததா? பிரகலாதனுக்கு விஷ்ணுவின் தரிசனம் கிடைத்ததா? என்பதே மீதி கதை.
பக்த பிரகலாதா புராணக்கதையைத்தான் அனிமேஷன் வடிவில் இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார். காட்சிக்கு காட்சி பிரமாண்டம். கண்ணை பறிக்கும் கிராபிக்ஸ் காட்சி என படம் முழுக்க அனிமேஷன் புகுந்து விளையாடி இருக்கிறது.
பல்வேறு மொழிகளில் படம் வெளியாகி இருந்தாலும், தமிழில் வசனங்கள் சிறப்பான எழுதப்பட்டு இருக்கிறது. படம் முழுக்க பின்னணி இசையில் சிலிர்க்க வைத்திருக்கிறார், சாம்.சி.எஸ். கிளைமேக்ஸ் காட்சியில் தெறிக்கும் இசை சிலிர்க்க வைக்கிறது.
பக்த பிரகலாதா கதை தெரிந்தவர்கள் இந்த படத்தை பார்த்து இன்னும் ஆனந்தப்பட்டு போவார்கள். தெரியாதவர்கள் ஆர்வமுடன் தெரிந்துகொள்ள வாய்ப்பு.
தொய்வில்லாத திரைக்கதை பெரும் பலம். பிரகலாதனை கொலை செய்ய முயற்சிக்கும் இடங்கள் அனைத்தும் திரில் ரகம். பல இடங்களில் எமோஷனல் டச்சும் கொடுத்து அசத்தியுள்ளார், இயக்குனர் அஷ்வின் குமார். இரண்டாம் பாதியில் சில இடங்கள் தொய்வு.
மஹாவதார் நரசிம்மா - தரிசிக்கலாம்






