நெட்பிளிக்ஸை சாடிய “மகாராஜா” பட நடிகர்

‘நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை’ என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘மகாராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இவர் தற்போது இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளார். பேட் கேர்ள் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
எப்போதும் தனது தடாலடியான கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் அனுராக் காஷ்யப், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல சேனலுக்கு பேட்டி அளித்த அனுராக் காஷ்யப் இதுதொடர்பாக பேசியபோது, “ நெட்பிளிக்ஸ் இந்திய சினிமா உலகை புரிந்து கொள்ளவில்லை.‘ஸ்கேம் 1992’ வெப் தொடர், சோனி லைவ் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், ஆரம்பத்தில் இந்தத் தொடரை தயாரிக்க வேண்டாம் எனத் தீர்மானித்தது நெட்பிளிக்ஸ். தொடர் வெற்றியடைந்ததும், ‘இதை நிராகரித்தது யார்? அவரை பணியிலிருந்து நீக்குங்கள்’ என முடிவு செய்தது அந்நிறுவனம். இப்படித்தான் அவர்கள் செயல்படுகின்றனர்.
நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளை உருவாக்குபவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் நடந்த கதைகளை, ஸ்கேம்களை படமாக்குவதில், வெப் சீரீஸ்களாக ஆக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ளாததால் பல முட்டாள் தனமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் நல்ல நல்ல இந்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிநாட்டு கதைகளை இங்கே விற்பனை செய்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.” என்று அவர் விமர்சித்தார்.






