சீனாவில் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'மகாராஜா'

நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
சீனாவில் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'மகாராஜா'
Published on

'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வெளியிட்டுள்ளனர். இப்படம் சுமார் 40,000 திரைகளில் வெளியானது. சீன மக்களிடையேயும் 'மகாராஜா' படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த நவம்பர் 29-ம் தேதி சீனாவில் வெளியான இத்திரைப்படம், வசூலில் ரூ.100 கோடியை நெருங்கி வருகிறது. இப்படம் இதுவரை ரூ.85.75 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதற்குமுன் வெளியான 'பாகுபலி 2' படம் ரூ.80.50 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது, சீனாவில் அதிக வசூலை ஈட்டிய முதல் தென்னிந்திய தமிழ் படம் என்ற பெருமையை 'மகாராஜா' படம் பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com