

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ திரைப்படத்தை பாராட்டி மகேஷ் பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கூலி' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன. இதன் டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பினை பெற்றது.
‘டிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது, அனைத்து பாடல்களையும் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் 15 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத், வேடன் இணைந்து பாடிய‘பூம் பா டிகா டிகா’ பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர். ‘ராகா ஆப் ரிவெஞ்’ மற்றும் ‘ஹேங் ஓவர்’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெளியான பத்து நாட்களுக்குள்ளேயே ரூ 50 கோடி வசூலைக் கடந்து, ரூ100 கோடி இலக்கை நோக்கி இப்படம் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.
படத்தைப் பார்த்த பிறகு மகேஷ் பாபு வெளியிட்ட பதிவில், “என்ன ஒரு அசல் மற்றும் அற்புதமான திரைப்படம்! மிகவும் கூலாக இருக்கிறது, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப்பார்த்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகேஷ் பாபுவின் பாராட்டுக்குச் சில மணி நேரங்களிலேயே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “மிக்க நன்றி சார்! நீங்கள் படத்தைப் பார்த்து பாராட்டியது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. உங்கள் அன்பிற்கும் இனிய வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இப்படத்திற்கு இசையமைத்து பலதரப்பட்ட பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் அனிருத்தும் மகேஷ் பாபுவிற்கு தனது நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளார்.