சூர்யாவின் “சீன்” திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் “சீன்” திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
Published on: 

‘சீன்’ திரைப்படத்தில் இயக்குநர் ஜித்து மாதவனின் எழுத்தும், திரைக்கதை அமைப்பும் மிகச் சிறப்பாக உள்ளதாக மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

3 நாட்களில் ரூ.145 கோடி வசூல்

‘சீன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் ‘சீன்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சீன்” படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

படத்தைப் பார்த்த பிறகு மகேஷ் பாபு வெளியிட்ட பதிவில் “சீன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் கூலாகவும், ஸ்டைலாகவும், புத்திசாலித்தனமாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் ‘சீன்’ திரைப்படம் அமைந்துள்ளது. இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா அசத்தியுள்ளார். நஸ்ரியா மற்றும் நஸ்லென் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் ஜித்து மாதவனின் எழுத்தும், திரைக்கதை அமைப்பும் மிகச் சிறப்பாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X