ஒன்றும் தெரியாத ஒருவர் முதலமைச்சராகும் படமே “மக்கள் தலைவா” - ராதா ரவி

ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
ஒன்றும் தெரியாத ஒருவர் முதலமைச்சராகும் படமே “மக்கள் தலைவா” - ராதா ரவி
Published on

ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார்.

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதா ரவி “இந்தப் படத்தில் ரவிமரியா கதையின் நாயகன் என சொன்னார்கள். கதையின் நாயகன் என்பதைவிட இந்தப் படத்திலேயே இளிச்சவாயன் அவர்தான். ஒன்றுமே தெரியாதவர் முதலமைச்சர் ஆகிறார். அவரை நான் எப்படி முதலமைச்சர் ஆக்குகிறேன் என்பது கதை. உண்மையில் இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், தேர்தலுக்கு முன்னால் வந்தாலும் இந்தப் படம் ஓடும், தேர்தலுக்கு பின்னால் வந்தாலும் ஓடும். ஏனென்றால் படத்தில் சில சிக்கலான விஷயங்களை வைத்திருக்கிறார். அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாது.

இந்த பட இயக்குநர் பார்க்க தான் நல்லவன் போல இருப்பான். ஆனால் நல்லவனே கிடையாது. படத்தில் நடிக்கவே எங்களை ஏமாற்றித்தான் அழைத்து சென்றான். முதலில் ஒரு சம்பளம் சொன்னான், பின்னர் அதிலிருந்து கொஞ்சம் குறைத்தான். நடித்துக் கொண்டே இருக்கும் போது இன்னும் குறைத்துவிட்டான். இதன்பிறகு விட்டுட்டு போக மாட்டோம் என அவனுக்கு தெரியும். ரொம்பவும் புத்திசாலி அவன். இந்தப் படமும் சிறப்பாக வந்திருக்கிறது, அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com