அமெரிக்க அதிபரின் கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்ற இந்திய நடிகை

அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்றுள்ளார்.
49 வயதாகும் நடிகை மல்லிகா ஷெராவத், பாலிவுட்டில் 'மர்டர்', 'வெல்கம்', 'குரு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'தசாவதாரம்', 'ஒஸ்தி', 'பாம்பாட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'பாலிடிக்ஸ் ஆப் லவ்' என்ற ஆங்கில படத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரசார ஊழியராக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில், பங்கேற்க பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து, மல்லிகா கூறுகையில், “வெள்ளை மாளிகையின் விருந்துக்கு அழைக்கப்பட்டது முற்றிலும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் வெள்ளை மாளிகையின் விருந்தில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.






