

மம்முட்டி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக, சினிமாதுறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மம்முட்டி, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘களம்காவல்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. மம்முட்டி கேரள அரசின் 7 மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மம்முட்டியின் சினிமா பங்களிப்பைப் பாராட்டும் விதமாக கேரளத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
இந்த நிலையில், மம்முட்டியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே தயாரித்து நடித்துவரும் புதிய திரைப்படத்திற்கு ‘மேளா’ என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நிதிஷ் சகதேவ் இயக்குகிறார். விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.
போஸ்டரில் மம்முட்டி கருப்பு சட்டை அணிந்து முரட்டுத்தனமான லுக்கில் இருக்கிறார். இவருக்கு 75 வயதா? என்று நம்பமுடியாத அளவுக்கு அவரின் தோற்றம் அமைந்துள்ளது. இது அவரின் தயாரிப்பில் 9வது படம் ஆகும். சமீபத்தில் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துள்ள மம்முட்டி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
தற்போது, காலித் ரகுமான் இயக்கம் ‘மட்டஞ்சேரி மாபியா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கூட்டணி அமைத்துள்ள மம்முட்டி ‘பாதயாத்திரா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்திலும் மம்முட்டி நடித்துள்ளார்.