

சென்னை,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இந்திரன்ஸ், தற்போது அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபுஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். முழுவதுமாக வாராணசியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், காசி நகரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இடையே உருவாகும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் இந்திரன்ஸ், தனது திரைப்பயணத்தில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் என் பெயரைச் சொல்ல வேண்டாம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுங்கள் என நினைத்தேன். காரணம், என் முந்தைய கதாபாத்திரங்கள் மற்றும் என் தோற்றத்தைப் பார்த்து பல நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்படிப்பட்ட சூழலில் மதுபாலா என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இந்திரன்ஸின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.