அண்ணாமலை போல பலருக்கு சீட் இல்லை… அரசியல் கற்று கொள்ளுங்கள் - இயக்குநர் மோகன் ஜி

பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது குறித்து இயக்குநர் மோகன்.ஜி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலை போல பலருக்கு சீட் இல்லை… அரசியல் கற்று கொள்ளுங்கள் - இயக்குநர் மோகன் ஜி
Published on

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாஜக வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.

பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாகவும் பேசப்படுகிறது. பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது குறித்து அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் கற்று கொள்ளுங்கள் இளைஞர்களே.. பாஜக வேட்பாளர் பட்டியல் பார்த்து அதிர்ச்சியாக தான் இருக்கும். அனைவரும் எதிர்பார்த்த அண்ணாமலை, அஸ்வத்தாமன், ஏ பி முருகானந்தம், அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ், எஸ் ஜி சூர்யா, இன்னும் பல பெயர்களை அறிவிக்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சிந்தாந்ததிற்காக எதையும் எதிர்பார்க்கமல் உழைத்து, வழக்கு வாங்கிய பல முகம் தெரியாத பலர் இன்னும் எந்த பொறுப்பும் இல்லாமல் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது அனைத்து கட்சியிலும் நடக்கும்.. எனவே இந்த சூழலில் அரசியல் கற்றுக் கொண்டு, NDA கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து, முடிந்தவர்கள் களத்தில் இறங்கி ஓட்டு கேளுங்கள்.. அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com