

மும்பை,
மராத்தி நடிகையும், பிரபல நாட்டுப்புறக் கலைஞருமான மது காம்பிகர் (72), உடல்நலக் குறைவால் புனேயில் நேற்று காலமானார். அவரது மறைவு மராத்தி திரையுலகினர் மற்றும் கலைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது காம்பிகர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே இருந்து வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புனேயில் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் புனேயில் நடைபெற்றன. மறைந்த மது காம்பிகருக்கு ஒரு மகன் உள்ளார்.
மது காம்பிகரின் மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மராத்தி திரையுலகில் நடிகையாகவும், நாட்டுப்புறக் கலைஞராகவும் அறியப்பட்ட அவரது மறைவு கலைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.