

மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் கோரிகாவன் மாவட்டத்தில் பிலிம் சிட்டியில், சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இதில், 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில, படப்பிடிப்பு தளத்தில் திடீரென சிறுத்தை புலி ஒன்று புகுந்துள்ளது. அது படப்பிடிப்புக்காக போடப்பட்டு இருந்த செட்டின் மீது ஏறி நடந்து சென்றது.
இதனை பார்த்ததும் படக்குழுவினர் அலறியடித்தபடி ஓடினார்கள். இதற்கு அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
அதன் தலைவர் சுரேஷ் சியாம்லால் குப்தா கூறும்போது, 10 நாட்களுக்குள் நடந்த 4-வது சம்பவம் இதுவாகும். இதில், யாரேனும் உயிரிழந்திருக்க கூடும். இதற்கு எதிராக அரசு எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
அரசு உடனடியாக பாதுகாப்புக்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனில் பிலிம் சிட்டியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், கலைஞர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறியுள்ளார்.