இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட மார்வெல்

நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட மார்வெல்
Published on: 

மும்பை,

இந்திய ரசிகர்களுக்காக தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை மார்வெல் இந்தியா வெளியிட்டுள்ளது.

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' உள்ளது. இந்த படம் ‘மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ வரிசையில் 39-வது திரைப்படமாக வெளியாகிறது. இதற்கு முன்பு 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரஸ்சோ பிரதரஸ் இப்படத்தையும் இயக்கியுள்ளனர்.

சூப்பர் ஹீரோக்கள்

குறிப்பாக ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்த ராபர்ட் டவுனி ஜூனியர், இந்த படத்தில் ‘டாக்டர் டூம்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தில் சில முக்கியமான சூப்பர் ஹீரோக்களின் கதைகள் நிறைவு பெற்றன. அதன் பிறகு வந்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் புதிய சூப்பர் ஹீரோக்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஆனால் அதில் பல திரைப்படங்களில் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படையே ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்க்க உள்ளது. நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டிசம்பர் ரிலீஸ்

இதனால் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக இந்தியாவில் இந்த படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி, ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 17-ந்தேதி வெளியாகும் என மார்வெல் இந்தியா அறிவித்துள்ளது.

தீபாவளி வாழ்த்து

மேலும் இந்திய ரசிகர்களுக்காக தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை மார்வெல் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மார்வெல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்திய மக்களின் முக்கிய பண்டிகைக்கு மார்வெல் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com