

சென்னை,
தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த மாதம் 10ஆம் தேதி பதவியேற்றார். திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்த விஜய், தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் கால் பதித்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
திரைத்துறையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சந்தித்து விஜய்க்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், நடிகர் சிம்புவும் நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார்.
சிம்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணன் அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் சேவையில் அவருக்கு வலிமையும், வெற்றியும், இறைவனின் ஆசிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்ற கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று சிம்பு அணிந்து வந்த உடை அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது நினைவுகூரத்தக்கது. விஜய் தேர்தல் பிரசாரத்தில் அணிந்து வந்த காஸ்ட்யூம் அடையாளமான வெள்ளை மற்றும் காக்கி உடையில் வந்து, சிம்பு தனது வாக்கினைப் பதிவு செய்துவிட்டு சென்றார்.