

சென்னை,
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'குட் பேட் அக்லி' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.