அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி

அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறி உள்ளார். #MeToo
அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி
Published on

மும்பை,

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று பல நடிகைகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மீடூ விவகாரத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை நடிகைகள், மீடியாவில் உள்ள பெண்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

மீடூ இயக்கத்திற்கு தமிழ் சினிமாவில் சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். பாலிவுட் பிரியங்கா சோப்ரா, ஹிர்திக் ரோசன் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இயக்குனர் மணிரத்தினம் படங்களான காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி தான் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வாரிசு நடிகர்கள், நடிகைகளை விட வெளியே இருந்து வருபவர்களுக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் கொடுமை அதிகம் நடக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. என்னை பற்றி மட்டும் தான் பேச முடியும். புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.

அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் வாய்ப்புகள் குறையும். இருப்பினும் என் கொள்கைகளை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. 3 படவாய்ப்புகள் வந்தும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை கவுரவத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.

எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை. சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் வித்தியாசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம்.

நான் ஏன் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. நான் சில பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அதனால் நம்பர் ஒன் ஆக முடியவில்லையே என்ற வருத்தமே இல்லை.

சிலருக்கு அதிகம் சம்பளம் வாங்குவது தான் வெற்றி. சிலருக்கு நிறைய விருதுகள் வாங்குவது வெற்றி. சிலருக்கு அதிக படங்களில் நடிப்பது. ஒரு பெரிய இயக்குனர் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்தால் அதை கவுரவமாக நினைக்கிறேன். அது தான் எனக்கு வெற்றி என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

அதிதி ராவ் ஹைதரி மீடூ இயக்கத்திற்கு ஆதரவளித்து உள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com