

‘மீசைய முறுக்கு 2’ படம் இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
குஷ்பு சுந்தர்.சி மற்றும் ஏ.சி..எஸ் அருண்குமார் தயாரிப்பில் திரைப்படமானது உருவாகியிருக்கிறது. படத்தின் உலகளாவிய திரையங்க வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் ‘மீசைய முறுக்கு 2’ படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் பிரமாண்டமான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் “ மிகக் குறுகிய காலத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, நமது தயாரிப்பாளர் சுந்தர் சி சார் அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்பதால், இந்த நிகழ்வு எனக்கு கூடுதல் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
‘மீசைய முறுக்கு’ படத்திற்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து இயக்குநர் ஆதி கூறும்போது “மீசைய முறுக்கு என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது. இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது ” என்று தெரிவித்துள்ளார்.
முக்கியமாக ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 25ம் தேதி முதல் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளனர்.