

சென்னை
தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். விஜயகாந்த் சிகிச்சை முடிந்து கடந்த 16 ந்தேதி சென்னை திரும்பினார்.
அ.தி.மு.க - பாஜக கூட்டணியில் தேமுதிக இணையப்போவதாக கூறப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ.க., பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதம் 27 தொகுதிகளே உள்ளன. மேலும், கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகளும் சீட் கேட்பதால், தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், தே.மு.தி.க.வோ 9 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தேர்தல் குழு உறுப்பினராக உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் விஜயகாந்தை திடீர் என சந்தித்தார். முதலில் விஜயகாந்திடம் உடல்நலம் விசாரித்த திருநாவுக்கரசர், பின்னர் அங்கிருந்த பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். சந்திப்புக்கு பின் வெளியே வந்த திருநாவுக்கரசரும் இதனை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்திடம் நேரில் உடல்நலம் விசாரித்தார். சந்திப்பின் போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது.
சந்திப்புக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அமெரிக்காவில் இருக்கும் போதே சந்திக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. நான் உடல்நலம் இன்றி மருத்துவமனையில் இருக்கும் போது முதன் முதலில் வந்து பார்க்க வந்தவர் கேப்டன். சிங்கப்பூரில் இருந்து நான் வந்ததும் முதலில் விசாரித்தவர் அவர்தான். அவர் எனது நல்ல நண்பர். அவர் நன்றாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.
இந்த சந்திப்பில் துளி கூட அரசியல் கிடையாது. நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே சொல்லி விட்டேன் இப்போது ஒன்றும் இல்லை என கூறினார்.