கனகாவுடன் சந்திப்பு: 'கரகாட்டக்காரன்-2' வருமா? - ராமராஜன் பதில்

சென்னை நெற்குன்றத்தில் உள்ள ராமராஜனின் வீட்டிற்கு நடிகை கனகா சென்று அவரை சந்தித்து பேசினார்.
சென்னை,
1989-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி வெளியான கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் - கனகா ஜோடியாக நடித்திருந்தனர். கரகாட்ட கலைஞர்களாக முத்தையா - காமாட்சி கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருந்தனர். மெகா ஹிட்டான இந்தப் படம் வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராமராஜன் செல்போனில் நடிகை கனகாவிடம் பேசியுள்ளார். அப்போது, தங்களை நேரில் சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால், கனகாவோ, "உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல். நானே உங்களை சந்திக்க வருகிறேன்" என்று கூறி, நேற்று சென்னை நெற்குன்றத்தில் உள்ள ராமராஜனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.
36 ஆண்டுகளுக்கு பிறகு கனகாவை சந்தித்தது குறித்து ராமராஜன் கூறியதாவது:-
சமீபகாலமாகவே கனகா தனிமையில் ஒரு வாழ்க்கை வாழ்வதாக கேள்விப்பட்டேன். அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. செல்போனில் தொடர்புகொண்டு பேசினேன். மறுநாள் சென்னை நெற்குன்றத்தில் உள்ள என் வீட்டுக்கே வந்துவிட்டார். என்னுடன் அமர்ந்து சாப்பிட்டார். பல விஷயங்கள் பரிமாறி மகிழ்ந்தார்.
கரகாட்டக்காரன்-2 படம் குறித்து ரசிகர்கள் கேட்பதை கூறினேன். அவர் மீண்டும் நடிக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் தாய், தந்தையை பறிகொடுத்து வெறுப்பில் வாழ்ந்து வரும் அவரை பார்க்க எனக்கே கஷ்டமாக இருந்தது. அவரது சந்திப்பு மலரும் நினைவுகளில் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.






