

2017ல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மேயாத மான்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னா இயக்கத்தில், வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ‘மேயாத மான்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘மேயாத மான்’ உருவாகிறது. இப்படத்தை கார்த்திகேயன் சந்தானத்தின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. பிரியா பவானி சங்கர் மீண்டும் 'மது' என்ற கதாபாத்திரத்திலும், இந்துஜா தங்கையான 'சுடர்' கதாபாத்திரத்திலும், விவேக் பிரசன்னா நண்பன் 'வினோத்' கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்து கொண்டதாவது: “மேயாத மான் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. நான் எங்கு சென்றாலும் பலரும் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் ‘மேயாத மான்’ என்று கூறுவார்கள். மேலும், 'எப்போது இதுபோல ஒரு படம் அல்லது ‘மேயாத மான் 2’ செய்வீர்கள்?' என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அந்தச் சமயங்களில் எனக்கு அதற்கான கதை எதுவும் தோன்றவில்லை. செய்ததையே மீண்டும் செய்வதிலும் எனக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், '29' திரைப்படம் வெளியான பிறகு, படத்தில் இருந்ததைப் போன்ற சம்பவங்கள் தங்கள் வாழ்க்கையிலும் நடந்ததாகப் பலர் என்னிடம் கூறினர். இதுதவிர படம் குறித்து எனக்குக் கிடைத்த பல்வேறு தகவல்களில் இருந்து, 'ஏன் ‘மேயாத மான் 2’ பண்ணக் கூடாது?' என்ற எண்ணம் மனதில் தோன்றி என் ஆர்வத்தைத் தூண்டியது. இந்தப் படம் சம்பிரதாய இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு வழியின்றி எடுத்த படமாகவோ இருக்காது; நிச்சயம் ஒரு தனிப்பட்ட படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்னகுமார் வைபவ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.