

தமிழக அரசியலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாட்டை ஆண்ட நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தனி இடம் உண்டு. அவரது மறைவுக்குப் பிறகு, சிவாஜி கணேசன் தேர்தலைச் சந்தித்தபோதிலும், அவர் படுதோல்வியையே தழுவினார். ஜெயலலிதா முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், அவர் தனிக்கட்சி தொடங்காமல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் மூலமாகவே முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். இவர்களைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் அரசியல் களத்தில் குதித்தாலும், அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் மட்டுமே. தேமுதிகவை தொடங்கி களமிறங்கிய அவர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்த அவரின் அரசியல் பயணம், எதிர்பாராத உடல்நலக்குறைவால் சரிவை சந்தித்தது.
தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர் சிவகுமார். நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஓவியம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகிறார். திரைத்துறை மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் சிவகுமார், மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார் “நடிகர்கள் நாட்டை ஆள முடியும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்து காட்டினார். அவரை போன்ற நடிகர் இனி பிறக்க வாய்ப்பில்லை. ரொனால்டு ரீகனுக்கு முன்பே நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர்., ஆனால் எம்.ஜி.ஆருக்கு வாரிசுகளே இல்லை. அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தைகள் கிடையாது. உலகிலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவரை போல் ஒருத்தர் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு பெரிய நடிகர் அரசியலில் தோற்று போனார். என்ன சொல்ல வருகின்றேன் என்றால், எல்லாம் பெற்றவன் யாரும் இல்லை. நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள். இன்னொருத்தருடன் ஒப்பிடாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக நினைத்தேன், அந்த வாய்ப்பு தவறிவிட்டது” என்றார்.
நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய், வரவிருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எம்.ஜி.ஆரைப் போல அவர் வெற்றிவாகை சூடுவாரா அல்லது மற்ற நடிகர்களைப் போல அரசியல் களத்தில் சறுக்குவாரா என்பதற்கான விடை வரும் மே 4ம் தேதி தெரியும்.