சரோஜாதேவியுடன் அமர்ந்து படம் பார்த்த எம்.ஜி.ஆர்.

சரோஜாதேவியுடன் அமர்ந்து படம் பார்த்த எம்.ஜி.ஆர்.
Published on

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நியூ சினிமா தியேட்டரிலேயே திரையிடப்பட்டன.

1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார், தங்கவேலு, நாகேஷ் நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடம். ராமு, இளங்கோ என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார்.

ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, அவருடைய உறவினரான நம்பியார் அனுபவிப்பார். ராமுவை சவுக்கையால் அடிப்பார். அவரின் கொடுமை தாங்காமல் ராமு வீட்டைவிட்டு வெளியேறுவார்.

வெளியே வீரராக வளர்ந்து வந்த இளங்கோ, அந்தவேளை உள்ளே நுழைவார். அவரை ராமு என்று தவறாக நினைத்து நம்பியார் இம்சை செய்வார்.

அவர் விடுவாரா? வீரராயிற்றே! சும்மா நம்பியாரை அடித்து துவம்சம் செய்வார். அப்போது விசிலும், கைதட்டலுமாக தியேட்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அமர்க்களம் செய்வர். தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான 'ராமுடு பீமுடு' படத்தின் 'ரீமேக்' தான் இப்படம். பூஜை போட்ட 2 மாதங்களில் அதாவது 45 நாட்களில் படத்தை முடித்து திரைக்கு கொண்டு வந்தனர். நாடோடி மன்னன் படத்தைத் தொடர்ந்து எங்க வீட்டுப் பிள்ளை வசூலை வாரிக் குவித்தது.

கடலூர் நியூசினிமா தியேட்டரில் நடந்த 100-வது நாள் படவிழாவில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆர். சரோஜாதேவி வருகை தந்தனர்.

தகவல் அறிந்த கடலூர் நகர மக்கள் மட்டுமல்லாது தென்னாற்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாட்டு வண்டிகளை கட்டிக் கொண்டு நூற்றுக் கணக்கானவர் கடலூருக்கு திரண்டு வந்தனர். நியூ சினிமா தியேட்டர் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. வெற்றி விழாவில் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் கலெக்டராக இருந்த வி.எஸ்.சுப்பையா, எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, தங்கராஜ் முதலியார் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து எங்க வீட்டுப் பிள்ளை படத்தை பார்த்தார்கள். தனது படங்கள் வெள்ளி விழாக் காணும் போதெல்லாம் நியூ சினிமா தியேட்டருக்கு வந்து செல்வதை எம்.ஜி.ஆர். வழக்கமாக வைத்திருந்தார். அப்போது தங்கராஜ் முதலியாருக்கு சொந்தமான பிருந்தாவனம் ஓட்டலில் 2 நாட்கள்வரை தங்கிச் செல்வார். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அறையில் வேறு யாரையும் தங்குவதற்கு அனுமதிப்பது இல்லை. அதேபோன்று கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தங்கராஜ் முதலியார் வீட்டிலும் எம்.ஜி.ஆர். அடிக்கடி சென்று தங்கியிருக்கிறார்.

ஒரு முறை எம்.ஜி.ஆர். ஜப்பானுக்கு சென்றிருந்த போது விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். கடலூர் வந்த போது, அதை நியூ சினிமா முத்தையாவுக்கு தனது நினைவாகக் கொடுத்தார். அந்த கைக்கடிகாரத்தை தங்கராஜ் முதலியாரின் குடும்பத்தினர் இன்னமும் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com