

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான 'மைக்கேல்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் ஏற்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
‘மைக்கேல்’ படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
லயன்ஸ்கேட் ஸ்டுடியோ, யுனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் கினோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் நியா லாங், ஜூலியானோ வால்டி, கெய்லின் டூரல் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி வெளியானது.
இந்த நிலையில், ‘மைக்கேல்’ படம் உலகளவில் ரூ. 9,000 கோடிக்கும் (1 பில்லியன் டாலர்) மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ (977 மில்லியன் டாலர்) படம் முதல் இடத்தில் இருந்தது. அதை தற்போது மைக்கேல் தாண்டியுள்ளது.