“டோரதி” படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு

ரிஷிகாந்த், சனந்த் , கீர்த்தி சுரேஷ் நடித்த ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
“டோரதி” படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு
Published on: 

‘டோரதி’ படக் குழுவினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார்.

‘டோரதி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’ சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

திரைப்பிரபலங்களின் பாராட்டு

வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து , ராஜு முருகன் உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் ‘டோரதி’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு வாழ்த்து

இந்நிலையில், ‘டோரதி’ படக் குழுவினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடனிருந்த படக்குழுவினருக்கும் அமைச்சர் வன்னி அரசு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் வன்னி அரசு “டோரதி படம் பார்த்தேன். படக்குழுவை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று நேரில் அழைத்து பாராட்டினேன். டோரதி படம் சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாதிய கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நிறைய பேர் வந்துள்ளது மகிழ்ச்சி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.

பெண்கள் பலவீனமாக இருப்பதாக சமூகக் கட்டமைப்பு உள்ளது. திருநங்கைகள் எப்படி புறக்கணிப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என பார்க்கிறோம். திருநங்கைகள் மனித சமூகத்தில் ஒரு அங்கம் என அங்கீகாரம் செய்யப்படவில்லை. டோரதி திரைப்படம் திருநங்கையருக்கான புதிய மலர்வை உருவாக்கி உள்ளது. இது போன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும் என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் “மக்கள் டோரதி படத்தை திரையரங்கில் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். சமூகத்தில் சிறிய மாற்றம் உருவாகி உள்ளது என்று மக்கள் சொன்னார்கள். இப்போது அமைச்சர் வன்னி அரசு பாராட்டியது மகிழ்ச்சி” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com