"பிசாசு 2 " படத்தின் அப்டேட் கொடுத்த மிஷ்கின்

நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த ‘பிசாசு 2’ படத்தின் வெளியீடு குறித்து மிஷ்கின் பேசியுள்ளார்.
சென்னை,
கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிசாசு'. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற மிஷ்கின், "பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்காக இப்படம் திரைக்கு வர வேண்டும். படத் தயாரிப்பாளர்கள் அதற்கான முயற்சியில்தான் இருக்கின்றனர். என் இயக்கத்தில் உருவான டிரெயின் திரைக்கு வந்தபின் பிசாசு 2 வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.






