அளவான உணவும், நல்ல தூக்கமும் தான் ஆரோக்கியத்தின் அடித்தளம் - ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.
ஷில்பா ஷெட்டி
Published on

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி, தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த 'குஷி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மேக்கோ ரீனா மேக்கோ ரீனா' பாடலில் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சினிமாவுடன் தொழில் துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். 51 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக உடற்தகுதியையும், அழகையும் பராமரித்து வரும் ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆரோக்கியத்திற்கு அடிப்படை நல்ல தூக்கம்

இதுகுறித்து பேசிய அவர், “நடிகர்களைவிட நடிகைகள்தான் தங்களது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியமானது. அதேபோல் அளவான மற்றும் சத்தான உணவுப் பழக்கமும் அவசியம். இந்த இரண்டுமே உடல்நலத்தின் அடித்தளமாகும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “குடும்ப பொறுப்புகள் காரணமாக பல பெண்கள் தங்களது உடல்நலனை புறக்கணித்து விடுகின்றனர். ஆனால் முதலில் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். தூக்கத்தை இழந்தால் உடல்நலம் மட்டுமல்ல, வாழ்க்கை இலக்குகளும் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பெண்களின் ஆரோக்கியமே குடும்பத்தின் பலம்

தொடர்ந்து பேசிய ஷில்பா ஷெட்டி, “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். அதுபோல பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமும் மகிழ்ச்சியாகவும், உறுதியாகவும் இருக்கும். எனவே பெண்கள் தங்களது உடல்நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஷில்பா ஷெட்டியின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பார்க்கப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com