

மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர படம் 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இதில் அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கி உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட உள்ளனர். மரைக்காயர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்து கேரளாவில் மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியதும் 'மரைக்காயர் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களிடம் படக்குழுவினர் வற்புறுத்தினர். ஆனால் 80 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முன்வந்தனர். அதை ஏற்காமல் மரைக்காயர் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்தது. இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது தியேட்டர் அதிபர்கள் அதிக திரையரங்குகள் ஒதுக்க முன்வந்துள்ளனர்.
இதையடுத்து மரைக்காயர் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மோகன்லால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரைக்காயர் படம் 2020-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த கிராபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் ஆகிய 3 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.