பாலிவுட்டில் ரீமேக்காகும் மோகன்லாலின் “தொடரும்”


பாலிவுட்டில் ரீமேக்காகும் மோகன்லாலின்  “தொடரும்”
x

மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ‘தொடரும்’ படம் ரூ 231 கோடி வசூலித்தது.

மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது, ‘தொடரும்’ திரைப்படம். இந்தப் படத்தில் மோகன்லாலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷோபனா நடித்திருந்தார். ரூ.28 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.231 கோடியை வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. இந்த வெற்றியின் காரணமாக, அனைவரின் கவனமும் இப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தியை நோக்கி திரும்பியது.

‘இவருக்கு இதுதான் முதல் படமா?’ என்றால், இல்லை. இதற்கு முன்னே ‘ஆபரேஷன் ஜாவா’, சவுதி வெள்ளக்கா’ என்று இரண்டு படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் கமர்ஷியல் ரீதியில் வெற்றிப் படங்கள் இல்லை என்றாலும், கதை ரீதியாக ரசிகர்கள் பலரும் விரும்பும் படமாகவே இருந்தது. இதில் ‘ஆபரேஷன் ஜாவா’ திரைப்படம், இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்கள் நிரந்தர போலீஸ் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சைபர் கிரைம் போலீசாருக்கு உதவுவதையும், முடிவில் அவர்கள் இருவரும் ஏமாற்றப்படுவதையும் யதார்த்தம் மாறாமல் சொல்லியிருந்தது.

‘ஆபரேஷன் ஜாவா’, ‘சவுதி வெள்ளக்கா’ இரண்டும் கதைக்களத்தில் வெற்றி பெற்றாலும், முன்னணி நடிகர்கள் இல்லாத காரணத்தால் கமர்ஷியல் ரீதியாக பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ‘தொடரும்’ திரைப்படம் அப்படி அல்ல.. இந்தப் படத்தின் கதை, புதிது அல்ல. கார் டிரைவர் ஒருவர், போலீசுக்காக ஒரு உடலை மறைக்க உதவுகிறார். அந்த உடல் தன்னுடைய மகனுடையது என்பதே தெரியாமல். இந்த ஒரு இடம் மட்டும்தான் இந்தப் படத்தில் புதிது என்று சொல்ல முடியும். மற்றபடி பல படங்களில் பார்த்த காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்த காட்சிகள்தான் இதில் இருந்தது. ஆனாலும் இது கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை அடைந்தது. அதற்கு, அந்தப் படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இருந்தார் என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிர வேறு இல்லை.

தற்போது இந்தப் படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் பாலிவுட்டில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய தீவிர முயற்சி நடந்து வருகிறது. அந்தப் படத்தை தருண் மூர்த்தியையே இயக்க வைக்கலாம் என்றும் பாலிவுட் நினைக்கிறது. ஆனால் ‘தொடரும்’ படத்திற்குப் பிறகு மலையாள சினிமாவில் படுபிசியாக பயணிக்கத் தொடங்கி இருக்கிறார், தருண் மூர்த்தி. இவர் தற்போது ‘டார்பிடோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ‘பிரேமலு’, ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘லோகா சேப்டர் 1’ போன்ற படங்களில் நடித்த நஸ்லன், மலையாள முன்னணி நடிகர் பகத்பாசில், தமிழில் வளர்ந்து வரும் நடிகரான அர்ஜூன்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அதேபோல் மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் நடிப்பில் ‘ஆபரேஷன் கம்போடியா’ என்ற கிரைம் படத்தையும் இயக்குகிறார். இதில் ‘ஆபரேஷன் ஜாவா’ படத்தில் நடித்த லக்மன் அவரன், பாலு வர்கீஸ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த இரு படங்களின் மீதும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில்தான் அவருக்கு பாலிவுட்டில் ‘தொடரும்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இதுபற்றி தருண் மூர்த்தி கூறுகையில், “சினிமாவில் கால் பதித்த அனைவரும் அடுத்த கட்ட வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள். அது என்னைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி. ஆனால் இப்போது மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறேன். அந்த படங்களை முடித்த பிறகுதான் பாலிவுட்டில், ‘துடரும்’ படத்தை இயக்க முடியும். அப்படி அந்தப் படத்தை பாலிவுட்டில் இயக்கினால், அங்கே என்னுடைய தேர்வு அஜய்தேவ்கனாக இருக்கும்.

ஏனெனில் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்களில், உண்மைக்கு மிக நெருக்கமாக, இயல்பான விதத்தில் சென்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்தக்கூடியவர் அஜய்தேவ்கன் என்பது என்னுடைய கருத்து. ஏற்கனவே அதனை ‘திரிஷியம்’ படம் வாயிலாக நிரூபித்திருக்கிறார். அதனால் ‘துடரும்’ படக் கதையுடன் அவரை எளிதாக பொருத்திக்கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாலிவுட்டில் ‘தொடரும்’ படத்தை ரீமேக் செய்ய இன்னும் கால தாமதம் ஆகும் என்பது புரிகிறது. இல்லை என்றால் படத்தின் உரிமையைப் பெற்று, அவர்களே வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை இயக்க முன்வரவேண்டும். யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

1 More update

Next Story