

சென்னை,
இந்த படத்தின் கிராபிக்ஸ் குறித்து பல விமர்சனங்கள் வந்தது. முழுக்க முழுக்க ஏ.ஐ. என்றார்கள். எதுவும் உண்மையில்லை. முழுக்க முழுக்க தமிழ் கலைஞர்கள் பணியாற்றும் படம் இது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு. அதில் 15 காட்சிகளுக்கு மட்டுமே ஏ.ஐ. என்று சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. இதற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நடந்த பட விழாவில் சுந்தர்.சி பேசும்போது, “கிட்டத்தட்ட 800 பேரின் ஒன்றரை ஆண்டு உழைப்பு தான், 'மூக்குத்தி அம்மன்-2'. இந்த படத்தின் கிராபிக்ஸ் குறித்து பல விமர்சனங்கள் வந்தது. முழுக்க முழுக்க ஏ.ஐ. என்றார்கள். எதுவும் உண்மையில்லை. முழுக்க முழுக்க தமிழ் கலைஞர்கள் பணியாற்றும் படம் இது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு. அதில் 15 காட்சிகளுக்கு மட்டுமே ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி இருக்கிறோம். எனவே திரைப்படத்தைப் பார்க்கும்போது நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். சரியில்லை என்றால் தட்டிக்கொடுத்து கூறுங்கள்; கற்றுக்கொள்கிறோம். இந்த தீபாவளிக்கு அம்மனின் அருளோடு அனைவரது வாழ்க்கையும் செழிக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “என் வாழ்க்கையில் நான் மிகவும் கஷ்டப்பட்ட படம் இதுதான். சீரியஸ் படங்களை விட காமெடி படங்கள் எடுப்பது மிக கடினம். என்னை நம்பி எதுவுமே கேட்காமல் படத்தை தயாரிக்க முன்வந்த ஐசரி கணேசுக்கு மிகப்பெரிய நன்றி”, என்றார்.